Monday, November 30, 2015

தோப்புக்கரணம் போடுவது ஏன்?

தோப்புக்கரணம் போடுவது ஒரு காலத்தில் பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வராவிட்டாலோ, ஆசிரியர்கள் மாணவர்களை தோப்புக்கரணம் போட வைப்பார்கள். பரீட்சை நேரத்தில் பக்தி அதிகரித்து சில மாணவர்கள் பிள்ளையார் முன்பு தோப்புக்கரணம் போடுவதும் உண்டு. ஆனால் இப்போது தோப்புக்கரணம் போடுவதை அதிகமாகக் காணமுடிவதில்லை. அந்தப் பழக்கம் படிப்படியாகக் குறைந்து முற்றிலும் மறைந்துவிட்டது என்றே கூறலாம்.

கடவுளின் முன்பு தோப்புக்கரணம் போடுபவர்கள் கூட முழுமையாக போடுவதில்லை. காதுமடல்களைப் பிடிப்பதுமில்லை; முழுவதுமாக கீழே குனிவதுமில்லை. அவசர உலகத்தில் தோப்புக்கரணம் கூட "அவசரக்கரண'மாக மாறிவிட்டது.

ஆனால் தோப்புக்கரணத்தின் மகிமையை அமெரிக்கர்கள் புரிந்துகொண்டனர். தோப்புக்கரணத்தை ஆராய்ந்த நிபுணர்கள், இந்த எளிய உடற்பயிற்சியின் மூலம் மூளையின் செல்களும், நியூரான்களும் புத்துணர்ச்சி அடைகின்றன எனக் கண்டுபிடித்துள்ளனர்.

தோப்புக்கரணம் போடும்போடு காதுகளைப் பிடித்துக் கொள்வதால், முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. இதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளில் சக்தி வாய்ந்த மாற்றங்கள் நிகழ்கின்றன. இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழும்போது, மூளையின் இரு பகுதிகளும் பலன் அடைகின்றன.

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை கருவியின் உதவி கொண்டு ஆராய்ந்துள்ளனர். அதில் மூளையில் நியூரான்களின் செயல்பாடுகள் அதிகரிப்பதை கண்டுபிடித்துள்ளனர். மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைகின்றன. மூளைக்கு தகவல் அனுப்பும் காரணிகளும் வலுப்பெறுகின்றன. "ஆட்டிஸம்' போன்ற மன இறுக்கம் சம்பந்தப்பட்ட நோய்களுக்குக்கூட தோப்புக்கரணத்தை அமெரிக்க டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

தோப்புக்கரண பயிற்சியை தினமும் மூன்று நிமிடங்கள் செய்தால், வியக்கத்தக்க மாற்றங்களைக் காணலாம் எனவும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர். எனவே விநாயகர் வழிபாட்டில் தோப்புக்கரணம் இடம்பெறுவது உடல்நலத்திற்கு ஏற்றது என்பது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment