இடும்பனின் வரலாறு
இடும்பனின் வரலாறு பழனி முருகன் கோவில் தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. சூரபத்மன் போன்ற அசுரர்களுக்கு வில்வித்தை போன்ற வித்தைகளைப் பயிற்றிய இடும்பாசுரான் முருகனின் வேலால் அசுரர்கள் அழிந்தமையால் மனைவி இடும்பியுடன் வானவாசஞ் சென்றான். அவ்வழியால் திருக்குற்றாலத்துக்கு அருகில் அகத்திய முனிவரைக் கண்டு வணங்கி தம்மை ஆட்கொள்ள வேண்டினான். அகத்தியரும் திருக்கேதாரத்தில் உள்ள வனத்தில் இருக்கும் இரு மலைகளை எடுத்துக் கொண்டு பொதியமலைக்கு வருவாயானால் பெறற்கரும் பேற்றை அடைவாய் எனக் கூறினார்.
இடும்பனும் மனைவியோடு அவ்வனத்திற்கு சென்று இரு சிகரங்களையும் கண்டு பூசித்து மூல மந்திரங்களைக் கூறித் தவமிருந்தான். இரு சிகரங்களையும் தம் தவவலிமையால் பாம்புகளால் உறி போலச் செய்து தோளில் வைத்து காவடி எடுப்பார்போல பொதிகை சென்றான். பழனியை அடைந்தபோது முருகன் திருவிளையாடலால் இடும்பனுக்குக் காவடி பாரமாகத் தோன்ற அவற்றை இறக்கி வைத்தான். பின்னர் காவடியைத் தூக்க முடியாமல் போனது. அங்குள்ள மர நிழலில் தண்டாயுதபாணியைக் கண்டு அவனை விலகும்படி பணித்தான். முருகன் விலகாமல் இருக்கவே இடும்பன் கோபங்கொண்டு பாய்ந்தபோது அங்கு வீழ்ந்து இறந்தான். இடும்பியின் அழுகுரலுக்கிரங்கிய முருகனும் இடும்பனை உயிர்பெற்றெழச் செய்தார்.இடும்பன் தான் இருமலைகளையும் எடுத்துவந்தது போல காவடி எடுத்து வரும் அடியார்களுக்கு அருளும்படியும் கேட்டுக்கொண்டான். இக்கதையுடன் முருகனுக்குக் காவடி எடுக்கும் வழக்கம் உருவானதாகக் கூறுவர்.
No comments:
Post a Comment