Monday, May 30, 2016

நாகதோஷப் பொருத்தம் பார்ப்பது அவசியம்

பொதுவாக நமது ஜனனகாலத்தை வைத்துத்தான் ஜாதகக் கட்டத்தில் கிரகங்களின் இருப்பிடங்களைக் குறிக்கிறார்கள். சென்ற பிறவிகளில் நாம் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்படையிலேயே, இந்தப் பிறவியில் நமது ஜாதகக் கட்டங்கள் அமைகின்றன.
அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் சென்ற பிறவியில் செய்த தவறுகள், பாதகங்கள், பாவங்களைப் பொறுத்தே கிரக அமைப்புகள் ஜாதகத்தில் இடம் பெறும். பாவ, புண்ணியங்கள் தான், ஜாதகத்தில் தோஷங்களாகவும், தீயபலன்களாகவும், நற்பலன்களாகவும் பதிவாகும். ஆக பூர்வ ஜென்ம பாவ, புண்ணிய அடிப்படையில் தான் நமக்குப் பிரச் சனைகளும், பாதிப்புகளும் ஏற்படுகிறது.
நமக்கு ஜாதக ரீதியாக உள்ள பிரச்சனைகள், பாதிப்புகளைத்தான் தோஷம் என்று சொல்கிறோம். இப்போது நாகதோஷத்தைப் பற்றியும் அதற்கான பரிகார பலன் களையும் பார்ப்போம். நவக்கிரகங்களில் ராகுவும், கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன. அவைகளுக்குச் சொந்த வீடு கிடையாது.
எந்த வீட்டில் இருக்கிறார்களோ, அந்த வீட்டுக்குரியவனின் ஆற்றலை அதிகப்படுத்துவார்கள் அல்லது குறைப்பார்கள். இதனைத்தான் உச்ச, நீச்ச வீடு என்று குறிப்பிடுவார்கள். இந்த உச்ச, நீச்ச வீடுகளைப் பற்றி ஜோதிடர்களிடையே அபிப்ராய பேதங்கள் உண்டு. அதனால் ஒருவர் உபயோகப்படுத்தும் பங்சாங்கத்தின் படி, உச்ச நீச்சத்தை பின்பற்றலாம். ராகு, கேதுவினால் ஏற்படும் தோஷம், நாக தோஷமாகும்.
அதாவது ராகு, கேதுவின் ஒளிக்கற்றை அல்லது கிரணங்களால் ஏற்படும் பாதிப்பைத் தான் நாகதோஷம் என்கிறோம். இந்து சமயத்தின்படி, நாகங்களுக்கு கேடு விளைவித்தால் ஏற்படும் தோஷமாக நாகதோஷம் அறியப்படுகிறது. நாக தோஷமானது, ராகு தோஷம், கேது தோஷம், சர்ப்ப தோஷம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஜனன கால ஜாதகத்தின்படி, லக்னம் இருக்கும் இடம், முதலாம் இடம். முதலாம் இடத்திலோ, குடும்பஸ்தானம் என்று சொல்லப்படும் 2-ஆம் இடத்திலோ, பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ஆம் இடத்திலோ, களத்திர ஸ்தானமான 7-ஆம் இடத்திலோ, ஆயுள் ஸ்தானமான 8-ஆம் இடத்திலோ, விரைய ஸ்தானமான 12-ஆம் இடத்திலோ, ராகுவோ, கேதுவோ இருந்தால் நாகதோஷம் என்று அர்த்தம்.
1,2,5, 7, 8, 12 – ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருந்தால் நாக தோஷம் என்று எளிதாகப் புரிந்து கொள்ளுங்கள். நாகதோஷம் உள்ளவர்களுக்கு, நல்ல தசாபுத்தி காலங்களிலும் கூட, நல்ல பலன்கள் கிட்டாது. ராகு, கேது ஒருவரின் ஜாதகத்தில் சரியாக அமையாவிட்டால், பலவீனமாக இருந்தால் பரிகாரம் செய்ய வேண்டும்.
இதனை அம்மன் அருள் பெற்று, பலவீனமானவற்றை பலப்படுத்த ஆக்டிவேஷன் என்ற உத்திரயை பயன்படுத்துகிறோம். பாதகமான கிரகங்கள் பலம் பெற்று இருந்தால், (ராகு, கேது உட்பட) அதனை பலவீனப்படுத்த, ஆர்டிவேஷன் செய்கிறோம். இதனால் பலர் பலன்பெற்றிருக்கிறார்கள் என்பது அனுபவபூர்வமான உண்மை.
ஒன்று முதல் பன்னிரண்டு இடங்களில் ராகு, கேது இருந்தால், என்னென்ன பொதுப்பலன்கள் என்பதைப் பார்ப்போம். ஒருவரின் ஜனன கால ஜாதகத்தின் படி, லக்னத்தில் அதாவது முதலாவது இடத்தில் ராகு, கேது இவற்றில் ஏதாவது ஒன்றிருந்தாலும், அந்த ஜாதகத்தின் படி, அவர் செல்வந்தர் ஆவார்.
இருப்பினும் வியாதியால் தொல்லைள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். கண்டிப்பாக புத்திர பாக்கியம் இருக்கும். 2-ஆம் இடத்தில் ராகுவோ, கேதுவோ இருந்தால், நடுத்தர வயதில் யோகங்கள் கிட்டும். இருதார யோகம் உண்டு. பொதுவாக எப்போதும் ஏதாவது ஒன்றை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.
3-ஆம் இடத்தில் ராகு, கேது ஏதாவது ஒன்று இருந்தால், அந்த ஜாதகர் தைரியசாலியாகவும், மகாலட்சுமியின் கடாட்சம் பெற்றவராகவும் இருப்பர். 4-ஆம் இடத்தில் ராகுவோ, கேதுவோ இருந்தால், அந்த ஜாதகத் குறுகிய எண்ணம் உடையவராகவும், நன்னெறியில் நம்பிக்கை இல்லாதவராகவும் இருந்தாலும், பிறர்பால் தரிசனம் உண்ணவராகவும் இருப்பர்.
5-ஆம் இடத்தில் ராகு இருந்தால் பித்ரு சாபம், புத்திர தோஷம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் பூர்வ புண்ணியம் பாதிக்கப்பட்டு, எந்தக் காரியத்தைத் தொட்டாலும், அதில் தடை ஏற்படும். 6-ஆம் இடத்தில் ராகு, கேது ஏதேனும் ஒன்று இருந்தால், நிலையான யோகம் பெற்றவராக ஜாதகர் இருப்பர்.
பெண்களை வசீகரித்து, மகிழ்விக்கும் படி நடந்து கொள்வர். 7-ஆம் இடத்தில் ராகு, கேது ஏதேனும் ஒன்று இருந்தால், நீரினால் பாதிப்பு உண்டாகும். கலைகளில் சிறந்து விளங்குவர். இருதார யோகம் உண்டு. 8-ஆம் இடத்தில் ராகுவோ, கேதுவோ இருந்தால், பிற கிரகங்களின் சேர்க்கை மற்றும் பார்வையைப் பொறுத்தே பலன்கள் இருக்கும்.
9-ஆம் இடத்தில் ராகு, கேது ஏதேனும் ஒன்று இருந்தால், யோகங்களைக் கெடுக்கும். பெற்றோரோடு ஒத்துப் போகாது. தெய்வ வழிபாடு குன்றி, சண்டை, சச்சரவுகள் உறவினர்களோடு தொடர்ந்து கொண்டே இருக்கும். 10-ஆம் இடத்தில் ராகு, கேது ஏதாவது ஒன்றிருந்தால், பணத்திற்கு பஞ்சமே இருக்காது. செய்தொழில் சிறப்பாக நடக்கும்.
11-ஆம் இடத்தில் ராகு இருந்தால், நிறைந்த யோகம் உண்டு. பணம் பல வழிகளில் வந்து பையை நிரப்பும். தப்பான வழிகளில் கூட, சரியாக பணம் வந்து சேரும். 12-ஆம் இடத்தில் கேது இருந்தால் அடுத்த பிறவி கிடையாது என்று சொல்வார்கள். ராகு, கேது இங்கு மறைந்தால் கஷ்டங்களை கொடுப்பார் என்றும் சொல்லிவிட முடியாது.
இந்த ஜாதகர்களுக்கு, வாழ்க்கையின் கடைசி காலகட்டத்தில் மிகுந்த ஆன்மீக ஈடுபாடு தோன்றும். மேலே நாம் சொன்னது அனைத்தும் பொதுப்பலன் பிற கிரகங்களின் அமைப்பு, சேர்க்கை, பார்வை, நடக்கக்கூடிய தசை, நடக்கக்கூடிய புத்தி இதனை வைத்துத்தான் முழுப்பலனையும் கணிக்க முடியும்.
நாகதோஷப் பொருத்தம் :
ஆண், பெண் இருவர் ஜாதகத்திலும் நாகதோஷம் இருந்தால் திருமணப் பொருத்தம் செய்யலாம். ஆண் அல்லது பெண், இருவர் ஜாதகத்தில், ஒருவருக்கு தோஷம் இருந்து, மற்றவருக்கு தோஷம் இல்லாவிட்டால், அந்த ஜாதகத்தைப் பொருத்தம் செய்யக்கூடாது.
ஆண், பெண் இருவருக்கும் சுபபார்வை இருந்து, அதனால் தோஷம் நீக்கப்படுமானால், பொருத்தலாம். ஒருவருக்கு தோஷம் நீங்கினால் மட்டும் போதாது. ஒரு ஆணின் ஜாதகத்தில் 2,4,5,7,8,12-வது இடங்களால் ராகு அல்லது கேது சுபபார்வையுடன் இருந்தால், பெண் ஜாதகத்தில் தோஷம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திருமணம் செய்யலாம்.
நடுத்தர பலனே கிடைக்கும். அவர்களின் வாழ்க்கையில் ஏற்றமும், இறக்கமும், மகிழ்ச்சியும், துயரமும் கலந்தே இருக்கும். அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேது தசை, ஜன்ம நட்சத்திர தசையாக வருவதால், இப்படிப்பட்ட ஜாதகத்தில் கேது பகவான் லக்கினத்திலோ அல்லது 2-வது வீட்டிலோ இருந்தால், பாதிப்பு ஏற்படாது.
திருவாதிரை, சுவாதி, சதயம், ஆகிய மூன்றும் ஜன்ம நட்சத்திரமாக வருபவர்களுக்கு, லக்னத்தில் அல்லது 2-வது இடத்தில் ராகு அல்லது கேது இருப்பது தோஷமாகாது என்றும் ஜோதிட சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment